உலகெங்கும் வாழும் இளையான்குடியின் மண்ணின் மைந்தர்களுக்கு, மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர் V.M. பீர்முஹமது அவர்கள் மைந்தனின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் செயலர் (பொறுப்பு) அவர்கள், எனக்கு எழுதிய ஒரு கடிதம் 24/03 ல் கிடைத்தது. அக்கடிதத்திற்கு எனது பதிலாக 25/03 ல் ,ஒரு தபால் எழுதி சில விளக்கங்கள் கேட்டுள்ளேன். ஆனால் 1 மாத காலம் ஆகியும் அதற்கு பதில் வராததால்
இக்கடிதங்கள் நமது ஊர் நல விரும்பிகள் பார்வைக்கு......
எனக்கு கல்லூரி செயலரின் கடிதம்
படங்களின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
கல்லூரி செயலர் அவர்களுக்கு நான் அனுப்பிய பதில்
REGISTERED WITH ACKNOWLEDGMENT
அனுப்புநர்.
V.M.P. இப்னு ஜமாலுதீன்,D/7, ஹால்ஸ் டவர்ஸ்,
33/56, ஹால்ஸ் ரோடு, எக்மோர்,சென்னை 600 008
பெறுநர்,
செயலர் (பொறுப்பு) அவர்கள்,டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி,
இளையான்குடி,
அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தாங்கள் கடித எண் 2409/10, 17/03/2010 தேதியிட்ட கடிதம் கூரியர் சர்வீஸ் மூலமாக 24/03/2010 அன்று கிடைத்து அகம் மகிழ்ந்தேன்.
தாங்கள் கடிதத்தில் முதலில்,"தங்கள் தந்தையார் நினைவாக கட்டிக் கொடுத்த" என்ற வாக்கியம் முற்றிலும் தவறு.
என்னுடைய தந்தையார், இளையான்குடியில் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், கல்லூரியின் நிறுவன செயலாளரும், கல்விக்காக இக்கல்லூரிக்கு நிலதானம் அளித்தவரும்,
விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும், அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில், தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று அவர்கள் மட்டுமே முன் வந்து,
Dr. சாகிர் உசேன் கல்லூரி குறிப்பிட்ட கெடு காலத்திற்க்குள் ஆரம்பிக்க ஏதுவாக முதற்கட்டிடத்தை "தன் குடும்பத்தார் கட்டிடமாக" கட்டி திறப்பு விழா செய்து, கல்லூரியை 1970ல் செயல் படுத்திய, மர்ஹூம் அல்ஹாஜ் V.M. பீர் முஹமது அவர்கள் தான் எமது டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் "கல்லூரித்தந்தை" ஆவார்கள் என்பது நீங்கள் சொல்வது போல் எல்லோரும் அறிந்ததே..
தாங்கள் 2 வது பாராவில் சொல்வது போல், "தாங்கள் தாராள மனதுடன் தாங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்தார் பெயர் சொல்லும் அளவிற்க்கு"
நாங்களும் என் தந்தையாருக்கு அடுத்தபடியாக தாராள மனதுடன் புதியதொரு கட்டிடத்தைக் கட்டித்தரலாம்.
எங்கள் சொந்த பொறியாளரை அனுப்பி இக்கட்டிடத்தின் தரத்தை (Fitness) அறிந்து, புதுக்கட்டிடத்திற்க்கான எஸ்டிமேட், பிளான் ஆகியவற்றை எங்கள் சொந்த பொறியாளர் முடிவு செய்த பின், நாங்களே முன்னின்று (எங்கள் தகப்பனார் 1970 ல் எப்படி தான் ஒருவரே முன்னின்று இக்கட்டிடத்தை கட்டி முடித்தாரோ அதுபோல்) எங்கள் சொந்த பொறியாளர் முன்னிலையில் புதிய கட்டிடம் கட்டித்தரலாம்.
இதற்க்கு முன்பாக சில விளக்கங்கள் (பொறுப்பு) நிர்வாகத்திடம் கேட்டு அறிய வேண்டியது எங்களது உரிமை. இதற்க்கு விளக்கம் அளிக்க வேண்டியது உங்களது கடமை.
நாங்கள் இக்கல்லூரிக்கு எங்கள் தந்தையின் நினைவாக எக்கட்டிடமும் கட்டித்தரவில்லை. இதை முதலில் செயலர் (பொறுப்பு) அவர்கள் நன்கு அறிந்து கொள்ளவேண்டும்.
1970ல் நடந்த இக்கல்லூரி துவங்கிய வரலாறு சம்பந்தமாக தாங்களுக்கு எந்தவொரு விளக்கமும் தேவையெனில் சிறிதும் 'வேற்றுமை பாராமல்' இக்கடிதம் எழுதியது போல் எழுதி, என்னிடம் விளக்கம் அறியலாம்.
ஏனெனில் எமது இக்கல்லூரியின் வளர்ச்சியிலும், கல்வி மேம்பாட்டிலும் மிகுந்த அக்கறை காட்டும் குடும்பம் எங்களுடையது.
தங்கள் கடிதத்தில் முதல் 4 வரிகளில் சொல்வது விசித்திரமாக உள்ளது.
தற்சமயம் என் தந்தையார் Dr. சாகிர் உசேன் கல்லூரி தொடங்க “அல்ஹாஜ் V.M. பீர்முஹமது குடும்பத்தார் கட்டிடமாக “ கட்டிக்கொடுத்த முதல் கட்டிடம் எந்த பெயரில் இயங்கி வருகிறது?.
கட்டிக்கொடுத்தவரின் பெயரிலா?
அல்லது அவர்களின் குடும்பத்தின் பெயரிலா?
இதற்கு தயவு செய்து ஆதாரங்கள் (புகைப்படங்கள், மற்றும் சமீபகால தஸ்தாவேஜுக்கள்) எனக்கு அனுப்பி வைக்கவும்.
தற்சமய இக்கட்டிடத்தின் நிலையையும் போட்டோக்கள் எடுத்து அனுப்பினாலும் நலமே!
"அரசு சட்ட விதிகளுக்கு முரண்பாடாக ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டு" என்று விவரிக்கிறீர்கள். இதன் அர்த்தம் என்ன?
அரசு விதிகளுக்கு புறம்பாக ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்டது 1970ல் நடந்த தவறா?
இல்லை அது தற்போதைய விதியா?
1970ல் தவறு என்றால் அன்றைய தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா.நெடுஞ்செழியன் அவர்கள் முன்னிலையில், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்க எமது கல்லூரிக் கட்டிடத்தை திறந்து வைக்க அனுமதித்து இருப்பார்களா?
அல்லது கல்லூரிக்கல்வி இயக்ககம் தான் அனுமதித்து இருக்குமா?
மதுரை பல்கலைக்கழகம் தான் புகுமுக வகுப்பு நடத்த அங்கீகாரம் வழங்கியிருக்குமா?
விளக்கலாமே!
"அக்கட்டிடத்தை அப்புறப்படுத்தவேண்டிய சூழ்நிலை உள்ளது" என்று உங்களது கடிதத்தில் உள்ளது.
இக்கட்டிடத்தை காழ்ப்புனர்ச்சியுடன், பாராமுகமாக இருந்து பராமரிக்காமலும், மராமத்து செய்யாமலும் நிர்வாகம் இருந்ததினால் தான் இப்பொழுது தாங்கள் இக்கட்டிடத்தை அப்புறப்படுத்த விரும்புகிறீர்கள்.
இதுவரை இக்கட்டிடத்திற்கு மராமத்து செய்யவோ, பழுதுகள் பார்க்கவோ எங்களை உங்கள் நிர்வாகம் அழைக்கவில்லையே? ஏன்?
எந்த ஒரு கல்வி ஸ்தாபனங்களிலும் முதன் முதல் கட்டிடத்தை எப்படி “தாய்” போல் நிர்வாகஸ்தர்கள் கவனித்து வருகிறார்கள் என்பது கல்வி கற்றவருக்கும், கல்வி பணியில் உள்ளோருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும்.
ஒரு நிறுவனத்தில் எவ்வளவு மாட மாளிகை, கூட கோபுரங்கள் புதிது புதிதாக கட்டி வந்தாலும், முதல் கட்டிடமான தாய் கட்டிடத்திற்க்குத்தான் அதிக மதிப்பு என்பது உலகறிந்த, ஊரறிந்த விபரம்.
தாங்கள் “தாயை” (மூலகட்டிடத்தை) கவனிக்காமல் விட்டது. உங்கள் குற்றமா? என் குற்றமா?
எங்கள் இசைவுக்குப்பின், பொறியாளரைக் கலந்து தானே உத்தேச சிலவு வரையறுக்கப்பட வேண்டும். அதற்க்குள் தாங்களாகவே ஒரு உத்தேச முடிவுக்கு (ரூ 40 லட்சம்) வந்து விட்டது ஆச்சரியமே?
நாங்கள் இசைந்து விட்டால் எதற்க்கும் அசைந்து விடுவதில்லை..
1970ல் Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்க என் தந்தை எவ்வளவு சிலவில் அக்கட்டிடம் கட்டினார்கள் என்பது நீங்கள் அறிய நியாயமில்லை. அன்றைய எமது கல்லூரி கட்டிட சிலவு தொகைக்கு, இன்றைய மதிப்புப்படி கணக்கிட்டால் எனது தந்தை கல்விக்காக (கல்லூரிக்காக) வழங்கிய மதிப்பு கோடிகளில் வரும்.
கல்லூரி இணையதளத்தில், இந்த முதன் முதல் கட்டிடத்திற்க்கு (அல்ஹாஜ் V.M.பீர்முஹமது குடும்பத்தார் கட்டிடத்திற்கு) கதவு,ஜன்னல்கள் ஊரின் மற்ற இரு கனவான்கள் சிலவில் செய்தது என்று "பொய்யாக" வெளியிட்டுள்ளீர்களே?!
அதன்படி கதவு, ஜன்னல்கள் புதிய கட்டிடத்திற்க்கு வாங்க அக்கனவான்களின் குடும்பத்தாரிடம் தெரிவித்துவிட்டீர்களா?
மேலும், கடந்த வருடம் ஜூலை மாதம் என்னுடன் தாங்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசும் பொழுது "உங்கள் தகப்பனார் கட்டிடத்தின் உள்ள முகப்பு பெயருக்கு ஒரு செயற்குழு உறுப்பினர் (பொறுப்பு) புதியதாக வர்ணம் தீட்டியுள்ளார்கள்" என்றும்,
"கட்டிடத்தின் உள்ளே உங்கள் தகப்பனாரின் புகைப்படம் மாட்டுவதற்க்கு, பழைய புகைப்படத்தை நானே மதுரைக்கு கொண்டு போய் புதியதாக கலர் (Colour) புகைப்படமாக மாற்றி, மாட்டி வைத்து விடுகிறேன்" என்றும் சொன்னீர்கள்.
இப்பொழுது "அக்கட்டிடத்தை அப்புறப்படுத்தவேண்டிய சூழ்நிலை உள்ளது" என்று உங்களது கடிதத்தில் உள்ளது. சிதிலமடைந்த கட்டிடத்திற்க்கா இவ்வளவு செய்ய வேண்டும்?
இந்த 8 மாத காலத்திற்க்குள் இக்கட்டிடத்திற்கு என்று தனியாக ஏதும் “பூகம்பம்” வந்து விட்டதா?
மேலும் இக்கட்டிடம் நிலை பற்றி, 07/01/2009 அன்று என் மூத்த சகோதரருக்கு எழுதிய கடிதத்திலும், 03/06/2009 ல் எனக்கு எழுதிய கடிதத்திலும் இந்த விபரங்கள் ஏதுவும் குறிப்பிடப்படவில்லையே ஏன்?
இந்த ஒரு வருட காலத்திற்க்குள் இப்படி ஒரு நிலை இக்கட்டிடத்திற்க்கு எப்படி வந்தது?
பல லட்சங்கள் சிலவு செய்து, தாங்கள் நிர்வாகப் பொருப்புக்கு வந்ததாக, நான் சொல்லவில்லை. இளையான்குடியைச் சார்ந்த இணையதளங்களில் சில “பெருமகனார்கள்” பேட்டியிலும், கட்டுரையிலும் வெளி வந்தது.
அப்படிபட்ட தாங்கள் உங்கள் சந்தோசத்திற்க்காக, ஒரு சில ஆயிரங்கள் சிலவிட்டு இக்கட்டிடத்தை "அப்புறப்படுத்த" முயலுவதில் ஆச்சரியமில்லையே?
குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள், ஒரு குடும்பம் சிறந்து விளங்க ஒரு தலைவன் (தந்தை) ஒரு தலைவி (தாய்) மட்டுமே இருந்தால் சாலச்சிறந்தது அல்லவா?
அதைப்போல் ஒரு நிறுவனத்திற்க்கு(கல்லூரிக்கு) ஒரு “தந்தையும்” ஒரு “தாயும்” மட்டுமே இருக்கவேண்டும், அவர்களை (பெயர்களை) பேணி காத்து வந்திருக்க, வர வேண்டும்
இப்பொழுது கல்லூரிக்கு, நிர்வாகம், பல சொசைட்டி பெயர்களை மாற்றினாலும்,நிலைத்து நிற்பதும்,சொத்துக்கள் இருப்பதும் 1968 ல் பதிவு செய்த "இளையான்குடி கல்லூரிக்கழகம்" ஒன்றுதான்.
சட்டப்படியும்,தர்மப்படியும்,நியாயப்படியும் செல்லுபடியாகும் என்பது தாங்கள் அறிந்ததே!.
அதை போல் தான் கல்லூரி ஆரம்பித்த ஸ்தாபகர் யார் என்பதும்,முதன் முதல் கட்டிடம் கட்டி கொடுத்து அதிலிருந்தே கல்லூரியை தொடக்கியது யார் என்பதையும் நிர்வாகம்தான் காப்பாற்றி நிலைத்து நிற்க செய்யவேண்டும்
நாங்கள் புதியதாக கட்டிடம் கட்டித்தந்தாலும் ஒவ்வொரு நிர்வாகம் மாறும் போது, வேறு சில. பல கனவான்களின் பெயரை இனைத்து, இவர் சிமெண்ட் கொடுத்தார், இவர் ஜல்லி வழங்கினார், இவர் வேலையாட்களுக்கு சம்பளம் வழங்கினார் என்று விழா மலரிலும்,இணையதளத்திலும் “திரித்து” வெளியிட மாட்டீர்கள் என்பதற்க்கு என்ன உத்திரவாதம்?
மேலேகண்ட விளக்கங்களுக்கு,தெளிவுரையும், நான் கேட்கும் இக்கட்டிட சம்பந்தமான புகைப்பட ஆதாரமும் விரைவில் அனுப்பி வைத்தால் உங்கள் கூற்றுப்படி "தாங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டித்தர" நாங்கள் கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.
இதற்காக எங்களில் யாராவது, எமது பொறியாளருடன் ஊர் வந்து இக்கட்டிடத்தை புதுப்பிக்கவோ, புதியதாக எழுப்பவோ முயற்ச்சிகள் எடுக்கலாம்.
இதற்கு மேல் தங்கள் ஆசைப்படி, அபிலாசைப்படி, விருப்பப்படி, உங்கள் மகிழ்ச்சிக்காக இக்கட்டிடத்தை "அப்புறப்படுத்தி" நிறைவேற்றினாலும் எங்களுக்கு வருத்தம் இல்லை.
நாங்கள் மறைந்து விடுவோம், நீங்களும் மறைந்து விடுவீர்கள்.
ஆனால் இக்கல்லூரி பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும், அப்பொழுது உணமை ஜெயித்திருக்கும், இக்கல்லூரியின் வரலாற்றில் "மர்ஹூம் அல்ஹாஜ் V.M. பீர் முஹமது அவர்கள் பெயர், தாங்கள் 07/01/2009 ல் லெட்டரில் எழுதியபடி “பொன் எழுத்துக்களால்“ பொறிக்கப்பட்டிருக்கும்.
என்றுமே இக் "கல்லூரியின் தந்தை" "மர்ஹூம் அல்ஹாஜ் V.M.பீர் முஹமது அவர்கள் தான்.
ஒரு தந்தைதான் இருக்க முடியும் - இது பண்பாடு,கலாச்சாரம் .
கடைசி வேண்டுகோளாக,
தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் " ஆட்சிக்குழுவினர், முதல்வர்,பேராசிரியர்கள்,அலுவலர்கள்,மற்றும் மாணவர்/மாணவியர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்" என எழுதியிருக்கிறீர்கள்,
அதன் விளைவாக நான் எழுதும் இக்கடிதத்தையும் ஆட்சிக்குழுவினர், முதல்வர்,பேராசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவர்/மாணவியர் ஆகியோர்களுக்கு தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும். இதற்காக நகல் எடுத்து எல்லோருக்கும் விநியோகம் செய்யும் சிலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
(V.M.P.Ibnu Jamaludeen)
25/03/2010 Chennai-8
*****************
உலகெங்கும் வாழும் இளையான்குடியர்களுக்கு,
ஒரு சிறு சந்தேகம்.
டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சமீபத்தில்தான் "NAAC" கமிட்டியின் ‘A’ சான்றிதழ் வாங்கியுள்ளது என்று எல்லோரும் பெருமைப்பட்டோம்.
" NAAC " கமிட்டியின் PEER TEAM ஆய்வுக்காக (Reaccredited ) கல்லூரிக்கு 2010 ஜனவரி 4,5 தேதிகளில் வந்தார்கள் அல்லவா?
அவர்கள் ஆய்வு செய்யும்பொழுது இக்கட்டிடம் சிதிலமடைந்து, சேதமுற்று இருந்தால் எப்படி ‘A’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் என்பது ஆச்சரியம் அல்லவா?
கமிட்டியின் முக்கிய விதியாக கல்லூரியின் காம்பவுண்டுக்குள் உள்ள கட்டிடங்கள் (INFRASTRUCTURE) யாவும் நல்ல தரமாக இருக்கவேண்டும் என்பது தலையாய விதியாகும்.
சிதிலடைந்த "அப்புறப்படுத்த" வேண்டிய கட்டிடம்??
போட்டோக்கள். click to enlarge.
படங்களின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கலாம்.
படங்களின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கலாம்.
இந்த “வலுவிழந்த” கட்டிடத்திற்க்குள் தான் N.C.C., N.S.S. அலுவலக அறைகள் இயங்குகின்றன, மற்றும் முக்கியமாக இந்த வலுவிழந்த கட்டிடத்தில் தான் மானவர்களின் உடற்பயிற்ச்சி கூடமான ( GYM) இயங்கிவருகிறது. இதெப்படி???
சேதமுற்று இருக்கும் கட்டிடத்தில் ஜிம்மா?? இதையும் மதிப்பிற்குரிய " NAAC "PEER TEAM எப்படி அனுமதி கொடுத்தது?
NAAC (PEER TEAM) கமிட்டி ஆய்வுக்காக வரும் முன்னே, பல லட்சங்கள் சிலவு செய்து, அவசர அவசரமாக சுற்றுச்சுவர் கட்டியும், எல்லாக் கட்டிடங்களும் மராமத்து செய்தும், புதியதாக வர்ணம் தீட்டியும், கல்லூரிக்கு புது பொலிவு கொடுத்தார்களே,
அதைப்போல் இந்த முதல் வகுப்பறைக்கட்டிடத்திற்க்கு சில ஆயிரங்கள் சிலவு செய்து மராமத்து செய்து, "வலுவை" அதிகப்படுத்தியிருக்கலாமே? இதில் ஏன் பாராபட்சம், பாராமுகம்..
கடைசியாக,1970ல் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர் V.M.பீர்முஹமது அவர்கள் சாகிர் உசேன் கல்லூரி தொடங்க இனாமாக நிலமும் தந்து அதில் கட்டிடமும் கட்டி கொடுத்து, அதை கொண்டே அதிலிருந்தே சாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்ட தலையாய கல்லூரியின் தாய் கட்டிடத்தை,
அன்று எந்தவொரு சிறு துறும்பைக்கூட கல்லூரிக்காக கிள்ளிப்போடாத குடும்ப வாரிசுகள்தான் இன்றைய நிர்வாகத்தில் இருந்து கொண்டு, ‘அக்கட்டிடத்தை’ அப்புறப்படுத்த முயலுகிறார்கள்.
1970ல் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர் பீர்முஹமது அவர்கள் இனாமாக கட்டிய கட்டிடம் “தேவையில்லை” என்று இன்றைய நிர்வாகம் நினைக்கும்போது,
1970ல் அல்ஹாஜ் வாஞ்சூர் பீர்முஹமது அவர்கள் இனாமாக எழுதிக்கொடுத்த, கல்லூரி முகப்பு இடமான 2 ஏக்கர் 78 செண்ட் நிலத்தையும் இன்றைய நிர்வாகம் “தேவையில்லை” என்று திருப்பிக் கொடுத்து விடலாமே?!
யோசியுங்கள்! ஊர் நலம் விரும்பிகளே;
advt.
No comments:
Post a Comment