Sunday, May 17, 2015

‪# ‎முஸ்லிம்_கல்விச்_சங்கம் ‬#

பாமரனுக்கு கல்வியா?
பணம்படைத்தவனுக்கு மட்டும் கல்வியா?
பாமரனுக்கும் கல்வி சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் நமது முஸ்லிம் கல்வி சங்கம்.
கிபி. 1914 ஆம் ஆண்டு ரங்கூனில் மிகப் பெரிய வணிகராக இருந்த கலிபா நைனா முகம்மது, அங்கே கூலி வேலை செய்யும் நமது ஊர்காரர்களின் கல்வி அறிவின்மையால் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் அவர்கள் ஏமாற்ற படுவதை காண்கிறார். பத்து ரூபாய் கூலி என்று கைநாட்டு வாங்கிக் கொண்டு இரண்டு ரூபாய் கொடுத்து அவர்கள் ஏமாற்றப்படுவதை அறிந்து அதை தடுக்க நமது ஊரில் ரஹ்மானியா ஆரம்ப தர்ம பாட சாலை ஒன்றை நிறுவுகிறார்.
குறைந்த பட்சம் எழுத்தறிவும் எண்ணறிவும் ஊர் மக்களுக்கு கிடைக்கப் பெற உருவான முதல் தர்ம ஸ்தாபனமே சங்க பள்ளிக்கூடம் என்னும் ரஹ்மானிய பாட சாலை. கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த பள்ளிக்கு நூற்றாண்டு விழா. ஒரு முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நூற்றாண்டு காண்பது என்பது அபூர்வமான நிகழ்வு. அதை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் இல்லாது நமது ஊரின் தற்போதைய கல்வி தந்தைகளும், கல்வி அறங்காவலர்களும், காரியதரிசிகளும் மறந்து கண்ணடைத்து கதவடைத்துக் கொண்டனர்.
அந்த ரஹ்மானியா பாடசாலை யின் விரிவாக்கமே தற்போதைய இளையான்குடி மேல்நிலைப்பள்ளி. அதற்காக உருவாக்கப்பட்டதே இளையான்குடி முஸ்லிம் கல்வி சங்கம்.
இளையான்குடியின் பிரதான கடைத்தெருவில் பெருமாள் கோவிலுக்கு முன்பாக இருக்கும் தனது இடத்தில் ரஹ்மானியா தொடக்கப்பள்ளியை ஆரம்பிக்கின்றார் கலிபா நைனா முஹம்மது. அவருக்கு பிறகு பள்ளி பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் அவரது மகன் கலிபா KMN அப்துல் கரீம்.
இதற்கிடையில் ஊரில் ஒரு உயர்நிலைப் பள்ளியின் அவசியத்தை உணர்ந்த ஊர் பெரியவர்கள் ரஹ்மானியா பள்ளியின் விரிவாக்கம் என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் சாலையூரில் ஒரு வாடகை கட்டிடத்தில் எட்டாம் வகுப்புவரை இருக்கும் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளியை 30.6.1947 அன்று இந்திய சுதந்திரத்திற்கு முன்பே தொடங்குகின்றாகள். அந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர், சாம் A. துரை BABT.
பள்ளியின் இட நெருக்கடியை மனதில் கொண்டு கலிபா அப்துல் கரீம் அவர்கள் அன்றைய சிவகங்கை சமஸ்தானத்தின் ஜமீனாக விளங்கிய ஷண்முக ராஜா விடம் கோரிக்கை வைத்து தற்போதைய சிவகங்கை ரோட்டில் இருக்கும் 14 ஏக்கர் நிலப்பரப்பை பள்ளிகூடத்திற்காக அவரது பெயரில் தானமாக பெற்றுக் கொள்கிறார்.
கலிபா KMN அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் கிபி. 1948 ஆம் ஆண்டு இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டு 7.4.1948 அன்று கம்பனி ஆக்ட் சட்டத்தின் படி பதிவு பெற்ற அமைப்பாக ராமநாதபுரம் பதிவாளர் அலுவலகத்தில் எண்: 3 / 194849 GOMS 4709 என்ற எண்ணில் துணைப் பதிவாளர் பொன்னையாகோன் என்பவரால் பதியப்படுகிறது.
கல்வி சங்கத்தின் தலைவராக புதூரைச் சேர்ந்த சண்டி. SAN முகம்மது ராவுத்தர் அவர்களையும், செயலாளர் ஆக கலிபா KMN அப்துல் கரீம் அவர்களையும் கொண்டு, கீழ்கண்ட நிர்வாக உறுப்பினர்கள் பதவி ஏற்கின்றனர்.
1. ஒப்படையார். KS முகம்மது இஸ்மாயில்,
2. பண்டுவன். PNP துல்கருணை,
3. TMK செய்யது முகம்மது,
4. OKMP காதர் மைதீன் மற்றும்
5. KK சரிபு.
முதன் முதலாக அமைந்த நிர்வாக குழுவில் இளையான்குடியின் பிரதான INP மற்றும் IMP ஜமாத்தினருக்கும் சரிசம அளவில் பங்களிப்பு கொடுக்கப்பட்டதுடன், செயலாளர் INP ஜமாத்தை சேர்ந்தவராகவே இருந்தார். தலைவர் புதுரை சேர்ந்தவராக இருந்தார்.சாலையூர் ஜமாத்தினருக்கும் பிரதிநித்துவம் கொடுக்கப்பட்டு சமத்துவம் சகோதரத்துவம் நிலைத்தது.
இந்த கல்வி சங்கத்திற்கு தன் பெயரில் சிவகங்கை ஜமீன் ஷண்முக ராஜா அளித்த 14 ஏக்கர் நிலப்பரப்பையும் மாற்றி தருகிறார், கலிபா அப்துல் கரீம். அந்த பிரமாண்ட நிலப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஊர் பெரியவர்கள் ஒப்படையார் KMS முகம்மது இஸ்மாயில் மற்றும் அவரது சகோதரர்கள் KMS முகம்மது ஆரிபு, KMS இப்ராஹீம் இவர்களிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
இரண்டாம் உலகப்போரில்1945 இல் ஜப்பானியர்கள் மலாயா சிங்கபூரை தாக்கி பிடித்துகொண்டபோது உயிரிழந்த தனது தந்தை KM சுல்தான் அலாவுதீன் அவர்களின் நினைவாக மிகப்பிரம்மாண்ட மான அந்த administrative block பல லட்சங்கள் ருபாய் சிலவில் கட்டிமுடிக்கப்படுகிறது. அந்த கட்டிடத்திற்கு 30.6.1948 அன்று இளையான்குடி உயர்நிலைப்பள்ளி இடம் பெயர்கிறது. இன்றளவும் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் எந்த ஒரு உயர்நிலைப்பள்ளிக்கும் இவ்வளவு பெரிய கட்டிடம் இருக்க வில்லை.
- இன்னும் வரும்


By  Kabeer Vavanan .Dubai

No comments: