Sunday, May 17, 2015

‪#‎ முஸ்லிம்_கல்விச்_சங்கம்_2‬ #


மிகப் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட 

இளையான்குடி உயர்நிலைப் பள்ளி அதிகாரப்பூர்வமாக 29.7.1950 இல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரி PS குமாரசாமி ராஜா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஒன்றுமே இல்லாமல் பூச்சியத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு அன்றைய ரஹ்மானியா ஆரம்பப் பள்ளியின் உரிமையாளர் கலிபா KMN அப்துல் கரீம் அவர்கள் தன்னுடைய பள்ளியின் தளவாடங்கள், உபகரணங்கள், மற்றும் மாணவர்களை கொடுத்து உதவி இருக்காவிடில், இன்று நம் கண்முன் தோன்றும் இந்த மேல்நிலைப்பள்ளி ஒரு கனவாய் போயிருக்கும். நமது ஊர் சாமானியர்களுக்கு கல்வி எட்டாக் கனியாக இருந்து இருக்கும். கலிபா அப்துல் கரீம் அவர்களின் மறைவிற்கு பின் ஒப்படையார் KMS முஹம்மது ஆரிபு அவர்கள் செயலாளர் பொறுப்பை ஏற்கிறார்கள்.
இரண்டாவது நிர்வாக குழு இளையான்குடியின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. முஸ்லிம் கல்விச் சங்கத்தில் சர்க்கரை செட்டியார் நிர்வாக உறுப்பினராக சேர்க்கப்பட்டு இளையான்குடி மக்களின் மதநல்லிணக்கத்திற்கு கட்டியம் கூறப்பட்டது..
இரண்டாவது நிர்வாக குழு:
தலைவர்: சண்டி. SAN முஹம்மது ராவுத்தர், புதூர்.
செயலாளர்: KK முஹம்மது சரிபு
உறுப்பினர்கள்:
TMK செய்யது முகம்மது
மங்குலி MA ஆதம் பாவா
சர்க்கரை செட்டியார்
TM காதர்மீரா
VK இப்ராஹீம் அலி அம்பலம்
தலைமை ஆசிரியர் A அதிசயம் BALT Ex Officio
இந்த இரண்டாவது நிர்வாக குழுவின் ஆட்சிக்காலத்தில் 1952 இல் பள்ளி வளாகத்தினுள் ஆசிரியர்களுக்கான வீடுகள், புதூரைச் சேர்ந்த சண்டி முகமது ராவுத்தர் மற்றும் KK இப்ராகிம் அலி, சாலையூரைச் சேர்ந்த SA அப்பாஸ் இவர்களின் பொருள் உதவிடன் கட்டப்பட்டன.
பள்ளிக்கு முழுவதுமான மின்சார விளக்குகள் இணைப்புகள் அனைத்தும் தென்மலைக்கான் TK ஹமீது சுல்தான் அவர்களால் செய்யப்பட்டது.
1957 இல் ஒப்படையார் KMS முகம்மது இஸ்மாயில் சகோதரர்களால் பத்தாம் வகுப்பு கட்டிடம் விஸ்தரிப்பு கட்டிடமாக கட்டிக் கொடுக்கப்பட்டது.
முஸ்லிம்கள் பள்ளி என்பதால் சுதந்திரத்திற்கு பின் சிறிதுகாலம் உருது மொழி ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட்டது. பின்பு தீவிர திராவிட அரசியல் எழுச்சியால் அம்முயற்சி கைவிடப்பட்டு, தமிழே பிரதான மொழியாக நிலை பெற்றது.
மக்கள்தொகை குறைவாக இருந்த அந்த காலத்தில் இளையான்குடியின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மாணவர்களின் அறிவு கண்ணை திறக்கும் ஆலயமாக நமது பள்ளி விளங்கியது என்றால் அது மிகையாகாது. கால மாற்றத்தால், நமது ஊரை சுற்றி உள்ள சாலையூர், புதூர் போன்ற ஜாமத்தினர்கள் அவர்களுக்கு தனித்தனி பள்ளிகளை நிறுவிக்கொண்டனர்.
1962 இல் பொறியியல் கட்டிடம் கட்டப்பட்டது. பின்பு 1963 இல் பழைய மாணவர்கள் முயற்சியால் தண்ணீர் தொட்டியும், சைக்கிள் ஸ்டாண்டும் கட்டப்பட்டது. பழைய மாணவர் கழகம் சார்பில் அபுபக்கர் கடை என்று அழைக்கப்படும் கேன்டீன் கட்டித்தரப்பட்டது.
எட்டாம் வகுப்பு தொகுப்பு கட்டிடம் சிங்கப்பூர் ஹாஜியார் புதுகுளத்தான். அப்துல் அஜீஸ் அவர்களின் நிதி உதவியுடன் சீரமைக்கப்பட்டது. 1965 இல் விஸ்தரிப்பு கட்டிடம் ரூபாய் பத்தாயிரம் அரசு உதவி யுடனும் எஞ்சிய பணம் ஒப்படையார் KSM இஸ்மாயில் சகோதரர்கள் பங்களிப்பாலும் கட்டப்பட்டது.
சர்க்கரை செட்டியாரைத் தொடர்ந்து முஸ்லிம் கல்விச் சங்கத்தில் பிச்சை மாணிக்கம் செட்டியாரும் தொடர்ந்து உறுப்பினராக பதவி வகித்தனர். அதிக ஆண்டு காலம் தலைவர் பதவியை வகித்தவர் புதூரைச் சேர்ந்த சண்டி SNA முஹம்மது ராவுத்தர். இவருக்கு அப்போதைய வெள்ளைக்கார அரசு‪#‎கான்சாஹிப்‬ என்ற பட்டம் கொடுத்து கௌரவித்தது. இவர் தானமாக கொடுத்த இடத்தில்தான் தற்போதைய இளையான்குடி பஞ்சாயத்து போர்டு மற்றும் பஸ் ஸ்டான்ட் எல்லாம் அமைந்து உள்ளது. பரமக்குடி ரயில் நிலையத்திற்கும் இவர் இடம் கொடுத்துள்ளார் என்றும் சொல்லுவார்கள்.
இவரின் காலத்திற்கு பிறகு, இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் நுண்அரசியலில் புதூர்காரர்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது அவர்களின் பிரதிநித்துவம் முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது. அதே போலத்தான், நமது ஊர் செட்டியார்களின் பிரதிநித்துவமும், சர்க்கரை செட்டியார், பிச்சை மாணிக்கம் செட்டியார் (விக்டர் காபி), ராமசாமி செட்டியார் போன்றோர் நிர்வாக குழுவில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டும், பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தனர். படிப்படியாக அவர்களின் பிரதிநித்துவம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.
நமது பள்ளியில் ஆசிரியராக வேலை செய்துவந்த பாஸ்கர் வாத்தியார் தலைமை ஆசிரியர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் இருந்தும், இளையான்குடியின் மண்ணின் மைந்தராக இருந்தும், அவர் ஆக்கப்படாத காரண காரியங்களை அடுத்த பதிவில் காண்போம்.
- இன்னும் வரும்

By Kabeer Vavanan

No comments: